மேற்கு வங்க வன்முறை - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ஆளுநர் மற்றும் தேசிய மகளிர் ஆணைய தலைவர்!
மேற்கு வங்கத்தில் வஃக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த சில வாரத்திற்கு முன்பு மால்டா, முர்ஷிதாபாத் ஆகிய மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது. மேலும் பலர் அவ்விடத்தை விட்டு வேறு இடத்திற்கு குடிபெயரத் தொடங்கினர். வன்முறை வெடித்த சில பகுதிகளில் ஏற்பட்ட தாக்குதலில் தந்தை - மகன் (ஹரோகோபிந்தோ தாஸ் மற்றும் சந்தன் தாஸ்) உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
உயிரிழப்புக்கு பின் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர கொல்கத்தா உயர்நீதிமன்றம் மத்திய காவல் படையை அனுப்ப உத்தரவிட்டது. இதற்கிடையில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வக்பு திருத்த சட்டம் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்படாது என்றும் வன்முறையில் ஈடுபடாதீர்கள் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த சூழலில் தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கு முகாம் அமைத்து அரசு உதவிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் வன்முறை ஏற்பட்ட பகுதிகளை அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர் ஆகியோர் பார்வையிட்டனர். இருவரும் உயிரிழந்த தந்தை - மகன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். இது குறித்து செய்தியாளர்களிடம்சி.வி. ஆனந்த போஸ் கூறியதாவது, “எல்லைப் பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புக்காக கேட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும், முரண்பாடான தகவலால் நான் இங்கு பார்வையிட வந்தேன். வினோதமாகவும் காட்டுமிராட்டிதனமாகவும் இருந்தது” என்று கூறினார்.
அதே போல் விஜயா ரஹத்கர், “வன்முறையில் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிலர் தங்கள் கணவரையும் மகனையும் இழந்துள்ளனர். வீட்டில் இருந்தவர்களை வெளியே இழுத்துச் சென்று படுகொலை செய்துள்ளனர். இது கொடூரமானது. மேற்கு வங்கத்தில் இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இதையெல்லாம் நாம் முதல்முறையாகப் பார்க்கிறோம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும். தந்தை- மகன் உயிரிழந்த குடும்பத்தினரைச் சந்தித்தேன். மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். அவர்களின் வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். மாவட்டத்தின் சில பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படையின் நிரந்தர முகாம்களை அமைக்க வேண்டும் என்றும், மூன்று உயிர்களைக் கொன்ற விவகாரத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள். நாங்கள் ஆய்வு செய்ததை அறிக்கையாக மத்திய அரசுக்கு கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.