மேற்கு வங்கம் | ஆசிரியர் நியமன விவகாரம் - குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!
மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் (SSC) அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்திற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு 24,640 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டது. இதில் 23 லட்சம் பேர் போட்டியிட்டனர். ஆனால், அதிர்ச்சியூட்டும் வகையில் 25,753 நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
எனவே இந்த விவகாரத்தில் உள்ள முறைகேடுகள் குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழக்குத் தொடுத்தது, இது இறுதியில் இந்த நியமனங்களை ரத்து செய்ய வழிவகுத்தது. ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அரசு உட்பட பல தரப்பினரால் கொலகத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்பு இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்றபோது, ஏற்கெனவே கொல்கத்தா உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்பை உறுதி செய்தது. இதையடுத்து நியமனம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதரத்துக்காக போராடி வருகின்றனர். அவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சமீபத்தில் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் போராடி வரும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் முழு செயல்முறையையும் செல்லாது என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஏப்ரல் 22-ம் தேதி அறிவித்தது. அந்த தீர்ப்பை, கடந்த 3-ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
பணி நியமனம் பெற்ற அனைவருமே முறைகேடான முறையில் பணிவாய்ப்பை பெற்றவர்கள் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பணி நியமனம் பெற்றவர்களில் நியாயமான வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், நியாயமற்ற வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரும் இருக்கிறார்கள் என்பதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. ஆட்சேர்ப்பின் போது செய்யப்படும் எந்தவொரு குற்றமும் கண்டிக்கப்பட வேண்டும், மேலும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இருப்பினும், நியாயமான வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை கறைபடிந்த ஆசிரியர்களுக்கு இணையாக நடத்துவது கடுமையான அநீதியாகும்.
அவர்களை பணியில் இருந்து நீக்குவது லட்சக்கணக்கான மாணவர்களை, போதுமான ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறைகளுக்குள் தள்ளும். அவர்களின் பணிநீக்கம் அவர்களின் மன உறுதியையும் சேவை செய்வதற்கான உந்துதலையும் அழித்துவிடும். மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு பெரும்பாலும் ஒரே வருமான ஆதாரமாக இருக்கும் ஒன்றை இழக்கச் செய்யும். நீங்கள் ஒரு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளீர்கள். இந்த அநீதியை, மகத்தான மனித இழப்பை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களின் கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து, நியாயமான வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் பணியில் தொடர அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.