மேற்கு வங்கம் | வக்ஃப் சட்டத்திற்கு எதிராக கொந்தளித்த இஸ்லாமியர்கள் - கோரிக்கை வைத்த மம்தா பானர்ஜி!
திருத்தம் செய்யப்பட்ட வக்ஃப் சட்டம் சமீபத்தில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வக்ஃப் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகளில் மத்திய அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் முர்ஷிபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டுள்ளது. இதில் 15 காவல் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது. பல அரசு வாகனங்கள், காவல் நிலையங்கள், ரயில்வே அலுவலகங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக 110க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். இதனிடையே அப்பகுதியில் இணைதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வக்ஃப் சட்டத்தை தனது அரசாங்கம் செயல்படுத்தாது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அரசியலுக்காக கலவரங்களைத் தூண்டாதீர்கள் என மம்தா பானர்ஜி பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்த சட்டம் எங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்படாது. அப்படியானால் கலவரம் எதைப் பற்றியது?.
அனைத்து மதங்களைச் சேர்ந்த அனைவருக்கும் எனது உண்மையான வேண்டுகோள், தயவுசெய்து அமைதியாக இருங்கள், நிதானமாக இருங்கள். மதத்தின் பெயரால் எந்த அநீதியான நடத்தையிலும் ஈடுபடாதீர்கள். ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது. அரசியலுக்காக கலவரங்களைத் தூண்டாதீர்கள். கலவரங்களைத் தூண்டுபவர்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்கள். இந்தச் சட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. எனவே நீங்கள் விரும்பும் பதிலை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும். சில அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன. அவர்களின் வற்புறுத்தலுக்கு அடிபணிய வேண்டாம்”
இவ்வாறு மேங்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.