பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. செஞ்சியில், சுமார் ரூ.7 கோடிக்கும், குந்தாரப்பள்ளியில் ரூ.8 கோடிக்கும் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார ஆட்டுசந்தை பிரபலமானதாக உள்ளது. வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் இந்த வார ஆட்டு சந்தைக்கு செஞ்சி
சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர்
வெள்ளாடு, செம்மறி ஆடு, குறும்பாடு உள்ளிட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு
செல்வர்.
இங்கு விற்பனைக்கு வரும் ஆடுகளை தேனி, திண்டுக்கல், கம்பம், மதுரை, கடலூர், வேலுர், ஆம்பூர், சென்னை, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரளா பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்வர். இதனிடையே பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
குறிப்பாக வியாபாரிகள் மட்டுமல்லாமல் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களும் அதிக அளவில் ஆடுகளை வாங்கிச் சென்றனர். இந்த சந்தையில், வெள்ளாடுகள் ஜோடி ரூ.15,000 முதல் ரூ.25,000 வரையிலும், குறும்பாடுகள் ஜோடி ரூ.20,000 முதல் ரூ.35,000 வரையிலும், செம்மறி ஆடுகள் ஜோடி ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.
இன்று நடைபெற்ற சந்தையில், சுமார் 15 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதில், சுமார் ரூ.7 கோடிகளுக்கு மேல் வியாபாரம் அமோகமாக நடைப்பெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல், கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆடுகளை விற்பனை செய்யவும், வாங்கி செல்லவும் குந்தாரப்பள்ளி சந்தையில் குவிந்தனர். இன்று ஒரே நாளில் சுமார் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டையில் உள்ள ஆடுகள் விற்பனை சந்தையில் 500 -க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் 20 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.18,000 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த சந்தைக்கு புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான திருமயம், ஆலங்குடி, ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை, விராலிமலை, அன்னவாசல், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் சுமார் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது.
அதேபோல், நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.