Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட 20 சிவிங்கிப் புலிகள் குறித்த #Webseries : மத்திய அரசு ஒப்புதல்!

08:41 AM Sep 01, 2024 IST | Web Editor
Advertisement

ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகள் குறித்த 4 பாகங்கள் கொண்ட ஆவண வலைதொடரை (வெப் சீரிஸ்) படமாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

வாழ்விடம் இழப்பு, அதீத வேட்டை உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் அழிந்து போன சிவிங்கிப் புலி (சீட்டா) இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில் ‘சிவிங்கிப் புலி திட்டம்’ கடந்த 2009-ம் ஆண்டில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்டது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகளைக் கொண்ட முதலாவது குழு இந்தியா கொண்டு வரப்பட்டது.

இவற்றை தனிமைப்படுத்தலுக்கான வேலியிடப்பட்ட பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அந்த மாதம் 17-ம் தேதி விடுவித்தார். 2வது கட்டமாக கடந்தாண்டு பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 சிவிங்கிப் புலிகளுடன் சேர்த்து இதுவரை 20 சிவிங்கிப் புலிகள் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளன. இந்த சிவிங்கிப் புலிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன. உலக அளவில் சிவிங்கிப் புலிகள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி கொண்டு வரப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இந்த திட்டத்தின் ஆரம்பத்தில் விலங்குகளின் இறப்பு காரணமாக விமர்சனம் பெற்றது. எனினும், இந்த ஆண்டு 12 குட்டிகள் பிறந்துள்ளதால், திட்டம் சரியான பாதையில் சென்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சிவிங்கிப் புலி திட்டத்தின் நோக்கம், சிவிங்கிப் புலிகளை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவதில் எதிர்கொண்ட சிக்கல்கள், சிவிங்கிப் புலிகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத்துக்கான எதிர்பார்ப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் தயாரிக்கப்படும் வலைதொடரை படமாக்குவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

‘டிஸ்கவரி நெட்வொா்க்’ தொலைக்காட்சி மூலம் 170 நாடுகளில் வெவ்வேறு மொழிகளில் வலைதொடர் ஒளிபரப்பப்பட உள்ளது. சிவிங்கிப் புலி திட்டத்தின் 2ம் ஆண்டு தொடக்கமான செப்டம்பர் 17-ம் தேதி முதல் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவிங்கிப் புலிகள் குறித்த தொடருக்கான படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
CheetahdeathKuno National ParkMadhya pradeshNews7TamilTatriWeb Series
Advertisement
Next Article