#WeatherUpdate | காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து இலங்கை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளையொட்டி நிலை கொண்டு இருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முற்பகலில் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் நகரும் வேகம் குறைந்ததால், புயலாக உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அநேக இடங்களில் பெய்து வந்த மழையின் தாக்கமும் குறைந்தது. வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக அதே இடத்தில் நீடித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.