#WeatherUpdate | பிற்பகல் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. விடாமல் பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளக் காடாய் காட்சியளித்தன.
சாலைகளில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதற்கிடையே, ஃபெஞ்சல் புயல் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நேற்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது. சாலைகளில் தேங்கி இருந்த மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. புயல் கரையை கடந்ததை அடுத்து சற்று மழை ஓயும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கரூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.