#WeatherUpdate | தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றைய தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.. அதில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 19.09.2024 முதல் 25.09.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று அறிவித்திருந்தது.
இன்னும் 1 வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று காலையிலேயே மழை பெய்ய துவங்கிவிட்டது.. மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், அங்கு கனமழை பெய்தது. இதனால், தென்மேற்கு பருவக்காற்று திசை மாறி, தமிழகம் நோக்கி வர வேண்டிய ஈரக்காற்று தடைபட்டுவிட்டது.
எனவே, கடந்த சில நாட்களாகவே காலை நேரத்தில், அக்னி நட்சத்திரம் போல வெயில் கொளுத்தியெடுத்தி வந்தது. இப்போது மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையை கொடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக வலுவிழந்து வருகிறது. இதனால், தென்மேற்கு பருவக்காற்று மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இப்படிப்பட்ட சூழலில்தான், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. இதனால், காலை நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த சூழல் காணப்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் மழை பெய்ய துவங்கி உள்ளது. இன்று காலையிலும் சென்னை புறநகர் பகுதிகளில் லேசாக மழை பெய்ய துவங்கியிருக்கிறது.
இதனால், வெப்பம் தணிந்து குளுகுளு வெப்பநிலை காணப்படுகிறது. அதேபோல, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று மழை எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.