#WeatherUpdate | அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... எங்கெல்லாம் தெரியுமா?
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததுள்ளது. நேற்று ஒன்றிரண்டு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக ராமநாதபுரத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை வெளுத்து வாங்கியது. பாம்பனில் அதிகபட்சமாக 28 செ.மீட்டர் மழை பெய்தது. சில இடங்களில் இன்று காலை வரை மழை தொடர்ந்தது.
இந்த நிலையில், இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.