Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#WeatherUpdate | "தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்!

05:09 PM Dec 10, 2024 IST | Web Editor
featuredImage featuredImage
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

''தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை - தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 4 நாட்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

நாளை டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். அதேபோல், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (டிச.12) திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், நாகப்பட்டினம் வரையிலான வடகடலோர மாவட்டங்களிலும் வேலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 13ம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்.

சில நேரங்களில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 45 சென்டிமீட்டர் அளவிலான மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 40 சென்டிமீட்டர் ஆகும். இது இயல்பை விட 14 சதவீதம் அதிகமாகும்"

இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement