#WeatherUpdate | வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,
"தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்று சுழற்சி நிலவுகிறது. இந்த சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் அதாவது நவம்பர் 10 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக நவம்பர் 11 ஆம் தேதி முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் படிப்படியாக மழையின் தாக்கம் அதிகரிக்கும். குறிப்பாக 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் வட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் எதிர்பார்க்கலாம். நவம்பர் 11 ஆம் தேதி முதல் தொடங்கும் மழைப்பொழிவு, பெரும் பாதிப்பைக் கொடுக்கக்கூடிய பெருமழையாக அமையாமல், பருவமழை தீவிரமடைந்து மழைப்பொழிவை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்."
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.