"விஜயகாந்த் புகைப்படத்தை யார் பயன்படுத்தினாலும் நாங்கள் தடுக்க மாட்டோம்" - பிரேமலதா விஜயகாந்த்!
மணப்பாறையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் 73-வது பிறந்தநாள், தேமுதிக 21-ஆம் ஆண்டு துவக்கவிழா முள்ளிப்பாடி முல்லை திடலில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, 73 அடி உயர கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
முதல்வரை அங்கிள், சார் என அழைக்கும் விஜய் பேச்சு அரசியல் நாகரீகமா என்ற கேள்விக்கு, அவரவர் பேசுவது அவரவர் ஸ்டைல். இதில் கருத்து சொல்ல முடியாது. மற்றவர் கருத்தை யாரும் கேட்பதில்லை. கருத்து சொல்லும் இடத்தில் நாங்களும் இல்லை. ஒரு கட்சி தொடங்கி வருபவர்களுக்கு தெரியும். அவர்கள் ஒரு கணிப்பில் வருகிறார்கள். இதில் கருத்து சொல்லவோ, அறிவுரை சொல்லவோ, விமர்சனம் செய்யவோ நாங்கள் விரும்பவில்லை. 2 மாநாட்டை முடித்துள்ளார், தற்போது மக்கள் சந்திப்பை விஜய் தொடங்கியுள்ளார் வாழ்த்துக்கள், வரட்டும் பார்ப்போம்.
கேள்வி: தவெகாவிற்கு கட்டுப்பாடு அதிகம் விதிக்கப்படுகிறதா?
"20 ஆண்டுகளுக்கு முன்பே இதே கட்டுப்பாடு தான் இருந்தது. நீங்கள் மறந்து இருக்கலாம், ஆனால் நாங்கள் மறக்கவில்லை. எல்லாமே எதிர்நீச்சல் போட்டு வந்தாதான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பது சாதாரண மக்களுக்கே இருக்கு. அப்படி இருக்கும்போது, இது ஒரு அரசியல் கட்சி, பெரிய ஆளுமைகள் ஆட்சி செய்த பூமி, அப்படி இருக்கும்போது புதிதாக வருபவர்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் இருக்கும். எதிர்நீச்சல் போட்டு வருவதில் ஒரே எடுத்துக்காட்டு நமது கேப்டன், அது சினிமா துறையாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் சாவல்களை முறியடித்து வெற்றி பெறும்போது தான் மக்களால் அங்கீகரிக்கப்படும்".
கேள்வி: ஆம்புலன்ஸ் அரசியல் பற்றி?
கேப்டனை பொறுத்தவரை அவர் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, ஆம்புலன்ஸ் வந்தால் அவரே மைக்கில் வழிவிட சொல்லுவார். இது நாம் மனித நேயத்துடன் செய்வது. ஆனால், கூட்டங்கள் நடப்பது இந்த இடத்தில் தான் என முன்கூட்டியே திட்டமிடுதல் இருக்கும்போது, காவல்துறை அவசரகால ஆம்புலன்ஸிற்கு மாற்று வழியை ஏற்படுத்தி தர வேண்டும். கூட்டங்களுக்கு நடுவே ஆம்புலன்ஸ் செல்வது கூட்டத்தினருக்கு இடையூறு தான். நாங்கள் மனித நேயத்துடன் எடுத்துக்கொள்கிறோம், ஆனால் எல்லாரும் அப்படி எடுத்துக்கொள்வார்களா என்பது தெரியாது. காவல்துறை மாற்றுவழி ஏற்பாடுகளை செய்தால், கூட்டத்தினருக்கும், ஆம்புலன்ஸ் சேவைக்கு இடையூறு ஏற்படாது. அது வரவேற்கக்கூடிய விசயம்.
கேள்வி: ராஜசபா உறுப்பினர் அளிக்கப்படாத நிலையில் அதிமுகவுடன் உங்கள் நிலைப்பாடு?
"அரசியலில் நிரந்தர எதிரியோ, நண்பரோ கிடையாது, நாங்கள் வெறும் ராஜசபா-வை மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள் கிடையாது. எங்கள் கட்சி வளர்ச்சி, அடுத்த தேர்தலுக்கான பணிகள், ஆளும் கட்சி, ஆண்ட கட்சி மட்டுமே உள்ள இடத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள தேமுதிக பூத் கமிட்டி அமைக்கும் சவாலான பணிகளை செய்து வருகிறோம். உரிய நேரம் வரும்போது, கூட்டணிகளுடன் எங்களது தேர்தலுக்கான பணிகளை ஆரம்பிப்போம்.
கேள்வி: விஜய் தனது கூட்டங்களில் விஜயகாந்த் படத்தை பயன்படுத்து குறித்து?
அவர் கேப்டனை அண்ணன் என சொல்கிறார். அதனால் நாங்கள் தம்பி என்று அழைக்கிறோம். வாழ்த்துக்கள் நன்றாக வரட்டும். சினிமாவிலேயே எல்லாரும் கேப்டன் படத்தை பயன்படுத்துகின்றனர். கேப்டன் எங்கள் குடும்ப சொத்து இல்லை. அவர் கட்சி சொத்து இல்லை. அவர் தமிழக மக்களின் சொத்து. திரையுலகத்தை எப்படி காத்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் உரிமையுடன் கேப்டன் படத்தை பயன்படுத்துகின்றனர். நாங்கள் நிச்சயம் தடுக்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.