"அரசியலைத் தாண்டி மதிக்க வேண்டும்" - விஜய்யின் விமர்சனம் குறித்து நடிகர் சூரி கருத்து!
நடிகர் சூரி தனது பிறந்தநாளை இன்று (ஆகஸ்ட் 27, 2025) கொண்டாடினார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை, தனது குடும்பத்தினருடனும், ரசிகர்களுடனும் கொண்டாடிய அவர், தனது பிறந்தநாளை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தொடங்கினார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்:
மதுரையில் உள்ள தனது ராசாக்கூர் வீட்டிற்குச் சென்ற, 'தலைவன் தலைவி' படத்தில் பூசாரியாக நடித்த சங்கர், சூரிக்கு பிறந்தநாள் கேக் ஊட்டி தனது அன்பைப் பகிர்ந்துகொண்டார். அதன் பிறகு, சூரி தனது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். அகில இந்திய சூரி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பில், ரசிகர்கள் அவருக்கு ஆள் உயர மாலை அணிவித்து, ஆரவாரமாக வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்:
தனது பிறந்தநாளை ஒட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்ற நடிகர் சூரி, அங்கு சாமி தரிசனம் செய்தார். அப்போது, அவரைச் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து, அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பு:
சாமி தரிசனம் செய்து திரும்பிய சூரி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இன்று எனக்கும் என் தம்பிக்கும் பிறந்தநாள். ராமன்-லட்சுமணன் போல நானும் என் தம்பியும் இரட்டைப் பிறவிகள்" என்று கூறி நெகிழ்ந்தார்.
அம்மன் உணவகத்தின் வெற்றி:
தான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு, தனது ரசிகர்கள் மற்றும் உறவினர்கள்தான் முழு காரணம் என சூரி தெரிவித்தார். "அம்மன் உணவகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால், அதற்கு எல்லாரும் சூரி என்று சொல்வார்கள். அது கிடையாது. அம்மன் உணவகத்தின் வளர்ச்சிக்கு எனது தம்பிகள், அண்ணன்கள்தான் முழு காரணம். அம்மன் உணவகத்தால் தான் எனக்குப் பெருமை" என உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.
திரைப்படங்கள் குறித்த தகவல்:
'மாமன்' திரைப்படத்திற்குப் பிறகு, தனது அடுத்த படமான 'மண்டாடி' படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக சூரி தெரிவித்தார். "வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எப்படியோ, அதேபோல் கடலில் நடைபெறும் வீர விளையாட்டான போட் ரேசிங் தான் 'மண்டாடி' படத்தின் கதைக்களம். திரைப்படம் வரும்போது நிறைய விஷயங்கள் தெரியவரும்" என்றார்.
சினிமா மற்றும் அரசியல் பார்வை:
திரைப்படங்களில் காமெடி நடிகர்கள் குறைந்து வருவது குறித்து கேட்டதற்கு, "திரையில் காமெடிகள் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து அனைவரும் வர வேண்டும். அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறீர்கள், அதனால் நான் நல்லா வந்திருக்கேன். அதேபோல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுங்கள்" என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதலமைச்சர் குறித்த விமர்சனம் குறித்து கேட்டபோது, "இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும், எல்லாருக்கும் எல்லாரும் வேண்டும். நல்லவிதமாக அரசியலைத் தாண்டி, எல்லாரும் எல்லாத்தையும் மதிக்க வேண்டும். இன்று விஜய் ஒதுங்கி அரசியல் போயிருக்கிறார். அடுத்து திருப்பி வரலாம். அனைவருக்கும் விஜய்யைப் பிடிக்கும், எனக்கும் அவரைப் பிடிக்கும், என்னையும் அவர் பிடிக்கும். அரசியல் செல்வது அவருடைய விருப்பம்" என்று சூரி தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தார்.