‘திரைப்படங்களில் AI மூலம் விஜயகாந்தை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்’ - தேமுதிக முக்கிய அறிவிப்பு!
மறைந்த நடிகர் விஜயகாந்தை அனுமதியின்றி AI மூலம் திரைப்படங்களில் பயன்படுத்தக்கூடாது என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக நிறுவனரும், மறைந்த நடிகருமான விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்துவதாக தவகல்கள் வந்தநிலையில், அனுமதியின்றி இதுபோன்று செய்வதை தவிர்த்து கொள்ளவேண்டும் என தேமுதிக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் TECHNOLOGY மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது.
எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் The Greatest Of All Time திரைப்படத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் தோன்றுவது போல ஒரு காட்சி இருக்கும் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.