“நாங்கள் தவறவிட்டுவிட்டோம்..!” - தென்னாப்பிரிக்காவுடனான போட்டிக்கு பின் பாபர் ஆசம் பேட்டி
உலகக்கோப்பை தொடரில் உயிர்ப்போடு இருக்க விரும்பியதாகவும், ஆனால் அதை தவற விட்டுவிட்டதாகவும் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி வருகின்றன.
அந்த வகையில் உலகக் கோப்பை 2023 தொடரின் 26வது போட்டி பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா சாவா ஆட்டம் என்பதால் மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக செளத் ஷாகில் 52, பாபர் அசாம் 50, ஷதாப் கான் 43 ரன்கள் விளாசினர். தென்னாப்பிரிக்கா பவுலர்களில் இடது கை ஸ்பின்னரான தப்ரைஸ் ஷம்சி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்கோ ஜான்சன் 3, ஜெரால்ட் கோட்ஸி 2, லுங்கி இங்கிடி 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 47.2வது ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்திருந்த நிலையில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 93 பந்துகளுக்கு 91 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
இதையும் படியுங்கள் : பாகிஸ்தானை வென்ற தென்னாப்பிரிக்க அணி.. 10 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேற்றம்!
போட்டிக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம், “அம்பயர்ஸ் கால் போட்டியில் அங்கமான ஒன்று. ஆனால் அந்த முடிவு எங்களுக்கு சாதகமானதாக அமைந்திடவில்லை. இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று, தொடரில் இன்னும் உயிர்ப்போடு இருக்கவே விரும்பினோம். துரதிர்ஷ்டவசமாக அதை நாங்கள் தவறவிட்டுவிட்டோம். மீதம் இருக்கும் 3 போட்டிகளில் எங்களால் முடிந்ததை செய்ய முயற்சிப்போம்” என்று தெரிவித்தார்.