’சுனாமிக்குப் பின் முதலில் வந்து ஆறுதல் கூறியவர் விஜயகாந்த்’ - மீனவ மக்கள் கண்ணீர் அஞ்சலி...
நாகை மீனவ கிராமத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து, மீனவ பெண்கள் ஒப்பாரி வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சி கல்லார் மீனவ கிராமத்தில்
தேமுதிக தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் நடிகருமான கேப்டன்
விஜயகாந்த் மறைவையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது. ரசிகர் மன்றம் மற்றும்
தேமுதிக சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவ
படத்திற்கு மீனவ பெண்கள், ஆண்கள் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி
செலுத்தினர்.
அப்போது மீனவ பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது திரைப்படங்களில் வெளியான பாடல்களை ஒலிபெருக்கி மூலம் இசைத்து அஞ்சலி செலுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமி ஏற்பட்ட போது முதல் நபராக உடனடியாக பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்கள் மற்றும் மருத்துவமனைக்கு வந்து ஆறுதல் கூறியதாக தெரிவித்த அவர்கள், தங்களது குடும்பத்தில் ஒரு நபரை இழந்ததாகவும் கண்ணீருடன் நினைவு கூர்ந்தனர்.