#IndependenceDay | ”தமிழ்நாட்டின் கோட்பாடுகளை இந்தியா முழுவதும் செயல்படுத்தும் கடமை நமக்கு உண்டு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
தமிழ்நாட்டின் உன்னத கோட்பாடுகளை இந்தியா முழுவதும் செயல்படுத்தும் கடமையும், பொறுப்பும் நமக்கு உண்டு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார். பின்னர் உரையாற்றிய அவர்,
“நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துகள். விடுதலையை பாடுபட்டு பெற்றுக் கொடுத்த தியாகிகளை போற்றுவோம். சுதந்திரத்துக்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதி ஏற்போம். விடுதலை எளிதாக கிடைக்கவில்லை. 300 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு கிடைத்த சுதந்திரம் இது. ரத்தத்தையே கொடையாக தந்து பெற்ற சுதந்திரம் இந்திய சுதந்திரம். மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
4-வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன். நமது பன்முகத்தன்மையின் அடையாளம் தேசிய மூவர்ணக் கொடி. விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. எந்த மாநிலமும் செய்யாத வகையில் அனைத்து தியாகிகளையும் போற்றி வருகிறது திமுக அரசு. சமூகநீதி, சமத்துவம், மொழிப்பற்று ஆகிய கருத்தியலின் அடித்தளத்தில் செயல்படும் இயக்கம்தான் திமுக.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளில் 65000 இளைஞர்களுக்கு அரசு பணி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் தொழில்துறையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம். 2026-ம் ஆண்டு ஜனவரிக்குள் 75,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். கட்டபொம்மன், மருது சகோதரர்கள், ராமநாதபுரம் மன்னர் விஜயரகுநாத சேதுபதி, வ.உ.சி. வழித்தோன்றல்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. திமுக அரசின் திட்டங்கள் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் கிடைத்து வருகிறது.
இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க செயல்பட்டு வருகிறோம். மக்களுக்கு உண்மையாக இருப்பதே மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு, தமிழ்நாடு மக்கள் தொடர்ந்து அளித்து வரும் வெற்றிக்கு தலை வணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னத கோட்பாடுகளை இந்தியா முழுவதும் செயல்படுத்தும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு. இந்திய நாட்டின் குடிமக்கள் ஆன நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி நம்மை காக்கும் நாட்டை காப்போம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இந்திய நாட்டு மக்களுக்கு என் விடுதலை நாள் நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.