"நபிகள் நாயகம்., இயேசு , புத்தரின் வழியில் மது ஒழிப்பை கோருகிறோம்; அரசியல் உள்நோக்கம் இல்லை" - #ThirumavalavanMP பேச்சு!
நபிகள் நாயகம், இயேசு, புத்தரின் வழியில் மது ஒழிப்பை கோருகிறோம் மாறாக அரசியல் உள்நோக்கத்திற்காக அல்ல என
தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும், தேசிய மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இம்மாநாட்டில் விசிக கொடியை திருமாவளவன் எம்பி ஏற்றி வைத்து தீர்மானங்களை வாசித்தார்.
இந்த மாநாட்டில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சிபிஎம் கட்சியிலிருந்து வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் பிரிவு தலைவர் ஃபாத்திமா முஸப்பர், காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பேசியதாவது..
“ மதுரையில் நடத்தி முடிக்கப்பட்ட வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கே நான் இன்னும் நன்றி சொல்லி முடிக்கவில்லை அதற்குள் மது ஒழிப்பு எனும் பெயரில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தியிருக்கிறோம். இந்த மாநாடு பெண்களால் நடத்தியிருப்பது சிறப்புக்குரியது. இந்த மாநாட்டிற்கு இயற்கை நமக்கு துணை புரிகிறது.
புத்தமதம் போதித்த முக்கியமான ஐந்து கொள்கைகளில் மது ஒழிப்பு முக்கியமானது. உலகில் தோன்றிய எந்த மகாணும் மதுவை ஆதரித்ததில்லை. மாறாக மதுவைத் தொட வேண்டாம் என வலியுறுத்திச் சொன்னார்கள். இயேசுவோ, நபிகள் நாயகமோ மதுவை ஆதரிக்கவில்லை. உலகிலேயே மதுவைத் தொடவே கூடாது என பிரசாரம் செய்து அதனை 1400 வருடங்கள் கடந்து செயல்படுத்தி வருகிறது எனி அது இஸ்லாம் மார்க்கம் தான்.
சவூதி, துபாய் போன்ற அரபுநாடுகளில் மது அறவே தடைசெய்யப்பட்டுள்ளது. மது என்பது பாவங்களில் தாய் என்று நபிகள் நாயகம் பிரசாரம் செய்தார். அதனை அந்தச் சமூகம் இன்றளவும் கடைபிடித்து வருகிறது. அதேபோல திருவள்ளுவர் கள்ளுண்ணாமை எனும் ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார். வள்ளலாரும் மதுவை எதிர்த்தவர்தான்.
இந்த மாநாட்டை காந்தியின் பிறந்தநாளில் நடத்துவது சிறப்புக்குரியது. காந்தியின் பல கொள்கையில் நமக்கு முரண்பாடு இருந்தாலும் அவரது முக்கியமான கொள்கையான மதச்சார்பின்மை மற்றும் மது ஒழிப்பு ஆகியவற்றில் நாம் அவரை பின்பற்றுகிறோம். அதனால் இந்த நாளை நாம் தேர்வு செய்தோம்.
இதனையும் படியுங்கள் : மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு – #VCK மாநாட்டில் தீர்மானம்!
நாம் மது ஒழிப்பு மாநாட்டை அறிவித்தபோது திருமாவளவன் அரசியல் கணக்கை இப்போதே தொடங்கி விட்டார் என சிலர் விமர்சனம் செய்கிறார்கள். தேர்தல் நடத்த இன்னும் ஒன்னரை வருடம் உள்ளது. அதற்குள் நமக்கு கணக்குபோட என்ன தேவை இருக்கிறது. இதற்கு முன் காவிரி விவகாரம், ஈழத் தமிழர் பிரச்னை தொடர்பாக அனைத்து கட்சிகளுக்குமான போராட்டத்திற்கு நாம் வலியுறுத்தவில்லையா? மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. எங்களது ஒற்றைக் கோரிக்கை மதுவிலக்காகும். நாங்கள் தமிழ்நாட்டில் மட்டும் மது ஒழிப்பை கோரவில்லை. மாறாக இந்தியா முழுக்க மது ஒழிப்பை கோருகிறோம்
விடுதலை சிறுத்தைகளே யார் குழப்பினாலும் நீங்கள் குழம்பிவிடக்கூடாது. காந்தியடிகளுக்கு கட்டவுட் வைத்திருக்கிறோம் அவரின் இரண்டு கோரிக்கைகளுக்கு உடன்பட்டுள்ளோம். ஆனால் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், அவரவர் மதம் அவரவருக்கு அவரவர் நம்பிக்கை அவரவருக்கு , அரசாங்கத்திற்கு மதம் கூடாது இதுதான் மதசார்பின்மை இதைச் சொன்னார் என்பதற்காக தான் ஆர்எஸ்எஸ் கும்பலை சார்ந்த நாதுராம் கோட்சே என்பவன் கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே போய் அந்த மாமனிதரை பக்கத்தில் நெருக்கத்தில் நின்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். ஆனால் இந்து மதம் தவறானது என்று சொன்ன அம்பேத்கரை சுடவில்லை. இந்து மதத்தில் பிறக்கும்போது இந்துவாக பிறந்திருக்கலாம் ஆனால் சாகும்போது இந்துவாக சாகமாட்டேன் என அந்த மதத்தை விட்டு வெளியேறி பௌத்தம் தடவிய புரட்சியாளர் அம்பேத்கரை சுடவில்லை.
தேசிய அளவிலேயே மதுவிலக்கு சட்டங்கள் கொண்டு வாருங்கள் அப்படி நடைமுறை படுத்தவில்லை என்றால் ஒவ்வொரு மாநிலமும் அதனை தீர்மானிக்க வேண்டும். மதுவிலக்கு கொள்கையில் நன்மை உள்ளது தேசிய கல்வி கொள்கையில் தீயது உள்ளது அதனால் எதிர்க்கிறோம். அதேபோல மதுவிலக்கு சட்டத்தை ஆதரிக்கிறோம் . விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மது குடிக்க மாட்டோம் என உறுதியாக இருக்கவேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசியுள்ளார். ” இவ்வாறு திருமாவளவன் பேசியுள்ளார்.