பேரிடர்களுக்கு இனியும் நாம் இயற்கையை குறைசொல்ல முடியாது - Madras High Court கருத்து!
உலகின் பல்வேறு பகுதிகளிலும் நேரிடும் பேரிடர்களுக்கு இயற்கையை இனியும் நாம் குறைசொல்ல முடியாது, அதற்கு நாம்தான் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த கனமழையால் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலை, ரயில் பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளுக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உதகை, கொடைக்கானல் உள்பட மலைவாழ்விடங்களில் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிப்பது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்து டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருள்களை சேகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம் உலகில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பேரிடர்கள் நேரிடுகின்றன. ஆனால், பேரிடர்களுக்கு இனியும் நாம் இயற்கையை குறைசொல்ல முடியாது, அதற்கு நாம்தான் முதல் காரணம் என தெரிவித்தனர். மேலும் உரிமைகளை பற்றி பேசும் மக்கள், தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.