"நாங்கள் மருத்துவர்கள்.. குழந்தைகள் அல்ல.. இந்த முடிவுகளை எடுக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது.." - முதுகலை நீட் தேர்வு ரத்து தொடர்பாக பெண் பேசிய வீடியோ வைரல்..!
"நாங்கள் மருத்துவர்கள்.. குழந்தைகள் அல்ல.. இந்த முடிவுகளை எடுக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது.." என முதுகலை நீட் தேர்வு ரத்து தொடர்பாக பெண் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடு விவகாரம் தேசம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்திய முறை சார்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள சூழலில் மத்திய சுகாதாரத்துறை முதுகலை நீட் தேர்வை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது.
முதுகலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதுகலை நீட் தேர்வு எழுத இருந்த மருத்துவராக பணிபுரியும் பெண் ஒருவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளதாவது..
“ ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருந்த நீட் தேர்வு ரத்து குறித்த அறிவிப்பு சனிக்கிழமை இரவு 9:30க்கு வெளியானது. அதாவது தேர்வுக்கான வினாத்தாள் கொடுப்பதற்கு 12 மணி நேரத்திற்கும் முன்னதாக தேர்வு ரத்து என்கிற அறிவிப்பை வெளியிடுகிறார்கள். கல்வி அமைச்சகத்தில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க தகுதியுடையவர்களா?
இதன் மூலம் அவர்கள் என்ன விஷயத்தை நிரூபிக்கப் போகிறீர்கள்? நாங்கள் மருத்துவர்கள் சிறு குழந்தைகள் அல்ல. உங்கள் கொள்கைகளால் நீங்கள் அழித்துக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் இருக்கவே அவர்கள் இந்த தேர்வு எழுதுகிறார்கள். ஆனால் இங்கே படித்துவிட்டு எல்லோரும் ஏன் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று கேள்வி கேட்கிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.