வயநாடு விரைகிறார் ராகுல்காந்தி! மத்திய அரசு உடனடியாக உதவிட மக்களவையில் வலியுறுத்தல்!
"வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்" என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 51-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிலச்சரிவில் 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில் கேரள எம்பிக்கள் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதேபோல மக்களவையிலும் வயநாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
” வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்து தர வேண்டும். நிவாரணத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
மீட்டுப் பணிகளில் மிகத் துரிதமாக செயல்படும் அதே நேரத்தில் மறுசீரமைப்பு பணிகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்கான திட்டங்களை தற்போதிருந்தே தொடங்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் பல இடங்களில் மிகவும் ஆபத்தான எண்ணிக்கையில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அவசர காலத்தில் நாம் இருக்கிறோம். கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தர வேண்டும் ” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வயநாடு விரையும் ராகுல்காந்தி
இதனிடையே, நிலச்சரிவால் சீர்குலைந்த வயநாட்டிற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி விரைகிறார். அவருடன் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் ஆகியோரும் விரைகின்றனர்.