வயநாடு நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291-ஆக உயர்ந்துள்ளது.
பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் கடந்த 29ம் தேதி வயநாட்டின் முண்டகை மற்றும் சூரல்மலையில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த பல்வேறு வீடுகள், பாலம் மற்றும் சாலைகள் சேதமடைந்து. மேலும் 400 குடும்பங்களை 1000த்திற்கும் மேற்பட்டோர் இதில் சிக்கினர்.
இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மேப்பாடி என்ற பகுதியில் தற்காலிக மின்மயானம் அமைத்து எரியூட்டி வருகின்றனர். உயிரிழந்தவர்களை அவரவர் மதத்தின் சார்பில் இறுதி மரியாதைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னதாக, ஆம்புலன்ஸ் மூலம் தற்காலிக மின்மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது செல்லும் போது சாலையோரம் இருந்த பொதுமக்கள் பூக்கள் தூவி இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், தற்காலிக மின்மயானத்தில் 100க்கும் மேற்பட்ட உடல்கள் ஒரே இடத்தில் வைத்து எரியூட்டப்பட்டது.
இதற்கிடேயே, நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று வயநாட்டிற்கு சென்றிருந்தார். நிலச்சரிவில் குடும்பத்தினரை இழந்து தவிப்பவர்களையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தற்போது வரை கிட்டதட்ட 291 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.