வயநாடு நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 276 ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது.
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த வாரத்திலிருந்து இந்த பருவமழை தீவிரமடைந்தது. இதனால் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கேரளாவில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் வயநாட்டின் முண்டகை மற்றும் சூரல்மாலாவில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த பல்வேறு வீடுகள், பாலம் மற்றும் சாலைகள் சேதமடைந்து. மேலும் 400 குடும்பங்களை 1000த்திற்கும் மேற்பட்டோர் இதில் சிக்கினர். நேற்றிலிருந்து இவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்கப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இன்னும் 206 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மேப்பாடி என்ற பகுதியில் தற்காலிக மின்மயானம் அமைத்து எரியூட்டி வருகின்றனர். உயிரிழந்தவர்களை அவரவர் மதத்தின் சார்பில் இறுதி மரியாதைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக, ஆம்புலன்ஸ் மூலம் தற்காலிக மின்மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது செல்லும் போது சாலையோரம் இருந்த பொதுமக்கள் பூக்கள் தூவி இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், தற்காலிக மின்மயானத்தில் 100க்கும் மேற்பட்ட உடல்கள் ஒரே இடத்தில் வைத்து எரியூட்டப்பட்டது.
இதற்கிடையே, இன்று கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு,கண்ணூரர்,கோழிக்கோடு போன்ற மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.