வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது - பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்!
வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் வி.முரளிதரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 387 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இதுவரை 172 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 8 பேரின் உடல்கள் நேற்று (ஆக. 4) தகனம் செய்யப்பட்டன. மீதமுள்ளவர்களின் உடல்கள் இன்று தகனம் செய்யப்பட உள்ளன. இன்னும் 180 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முன்னாள் மத்திய இணையமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வி.முரளீதரன் ஃபேஸ்புக்கில் ஆக. 4ம் தேதி வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது..
” கடந்த 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில், உள்துறை இணையமைச்சராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் பதவி வகித்தபோது தேசிய பேரிடர் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
அந்தக் கேள்விக்கு பதிலளித்த முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், 'மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் ஓர் இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை' என்றார்.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் 'தேசிய பேரிடர்' குறித்த சிந்தனையே இல்லை. இது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தே நடைமுறையில் இருக்கும் உண்மை. இதை முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் வெளிப்படையாகவே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.