வயநாடு நிலச்சரிவு - நடிகர் பகத் பாசில், நஸ்ரியா ரூ.25 லட்சம் நிதியுதவி!
கேரள நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளுக்காக நடிகர் பஹத் பாசில் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி அடுத்தடுத்து மூன்றுமுறை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இரண்டு கிராமங்களே முழுதுவமாக சகதியில் மூழ்கியுள்ளது. 400 குடும்பங்களை சேர்ந்த 1000த்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் சிக்கினர். இவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பல நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் அதில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 290-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்த நிலச்சரிவால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. நிலச்சரிவின் மீட்பு பணிகள் இன்றுடன் நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போரை மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் இருந்து மீள முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இப்பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகர் பகத்ஃபாசில் மற்றும் அவரது மனைவி நடிகை நஸ்ரியா நசிம் இருவரும் ரூ.25 லட்சம் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தங்கள் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;
“பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்குவதில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து நமது அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் பாராட்டத்தக்கவை. எமது மக்களின் அர்ப்பணிப்பும் உறுதியும் உண்மையிலேயே உத்வேகம் அளிப்பதாக உள்ளது மேலும் இந்த சவாலான நேரத்தில் எங்களது ஆதரவை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு உதவ, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ 25,00,000 வழங்குகிறோம். இந்த பங்களிப்பு உதவும் என்று நம்புகிறோம் தேவைப்படுபவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குங்கள்.
இந்த கடினமான காலகட்டத்தில் நாம் செல்லும்போது எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் நம் மக்களுடன் உள்ளன. ஒன்றாக, சகித்துக்கொண்டு ஜெயிப்போம்” என தெரிவித்துள்ளனர்.