#Wayanad இடைத்தேர்தல் | வேட்பாளரை அறிவித்தது பாஜக!
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக இருந்தது.
இந்த நிலையில், வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவலை குஷ்பு முற்றிலும் மறுத்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "தேர்தல் என்று வந்தாலே போதும், இதுபோல வதந்திகள் பரவத்தான் செய்கின்றன. எல்லா தேர்தல்களிலும் இந்த வதந்திகள் பரவுகின்றன. இப்போதும் அதுபோலவே ஒரு வதந்தி பரவுகிறது" என்றார். இந்த நிலையில், இன்று பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ்யா ஹரிதாஸ் யார்?
39 வயதான நவ்யா ஹரிதாஸ், கோழிக்கோடு மாநகராட்சியில் இரண்டு முறை கவுன்சிலராக இருந்துள்ளார். இவர் தற்போது கேரள பாஜக மகளிரணி பொதுச்செயலாளராக இருக்கிறார். ஹரிதாஸ், காலிகட் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கேஎம்சிடி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பிடெக் பட்டம் பெற்றுள்ளார். இவர் 2021 கேரள சட்டமன்றத் தேர்தலில் கோழிக்கோடு தெற்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் அகமது தேவர்கோவிலிடம் தோல்வியடைந்தார்.