பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை அணை தமிழகத்தில் இரண்டாவது மிக உயரமான அணையாகும். இந்த அணை இரண்டு மலைகளை இணைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த அணை பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்களம், குள்ளபுரம், கைலாசபட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட கிராமங்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்குகிறது.
பெரியகுளம் பகுதியில் உள்ள 2,865 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு பெரியகுளம், பாபிபட்டி, தாமரைக்குளம், சில்வார்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் நீர் நிரப்பி விவசாயத்திற்கு பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை, கொடைக்கானல் பேரிஜ் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை நீர் ஓடைகள் வழியாக வழிந்தோடி வந்து சோத்துப்பாறை அணையில் தேக்கப்பட்டுவந்தது. இதனால் சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் பெரியகுளம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு இன்று முதல் 136 நாட்களுக்கு சோத்துப்பாறை அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் திறப்பதற்கு அரசாணை பிறப்பித்துள்ளது.
நிலையில் இன்று முதல் சோத்துப்பாறை அணையில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வரை முதல் 45 நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடியும் விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 31 நாட்களுக்கு விநாடிக்கு 27 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 60 நாட்களுக்கு 25 கன அடி வீதம் 318.56 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் வரத்தை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அரசு கூடுதல் தலைமை செயலர் சதீஷ் சக்சேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை இதனால் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகள் முன்னிலையில் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் அணையில் இருந்து திறக்கப்பட்டு இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேனி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.