வைகை அணையிலிருந்து 4,000 கன அடி தண்ணீர் திறப்பு! கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் பூர்வீகப் பாசனப் பகுதிகளுக்கு இன்று முதல் விநாடிக்கு 4,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணையிலிருந்து, பெரியாறு பிரதானக் கால்வாய் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயில் திண்டுக்கல், மதுரை மாவட்டப் பகுதிகளின் பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு ஏற்கனவே வினாடிக்கு 2,099 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரசு உத்தரவின்படி, வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பூர்வீகப் பாசனப் பகுதிக்கு வியாழக்கிழமை முதல் நவம்பர் 29-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் பகுதிக்கு டிசம்பர் 1 முதல் 5-ஆம் தேதி வரையிலும், முதல் பகுதிக்கு டிசம்பர் 6 முதல் 8-ஆம் தேதி வரையிலான 3 கட்டமாக மொத்தம் 2,466 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பரப்பு பகுதி 3-க்கு வியாழக்கிழமை (நவ.23) முதல் நவ.29 ஆம் தேதி வரை மொத்தம் 1,504 மில்லியன் கன அடி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூர்வீக பாசனப் பகுதி 2 க்கு வரும் டிச.1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை மொத்தம் 619 மில்லியன் கன அடியும், மதுரை மாவட்டத்தில் உள்ள பூர்வீகப்பாசனப் பகுதி 1-க்கு டிச.6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை மொத்தம் 343 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையிலிருந்து, பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் பா.முருகேசன் அணையில் மதகுகளை இயக்கி தண்ணீர் திறந்து விட்டார். வைகை அணையிலிருந்து ஆற்றிற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என முருகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.