Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நிலச்சரிவுகளை முன்னெச்சரிக்கை செய்யும் அமைப்பு வேண்டும்” - நிபுணர்கள் கூறுவது என்ன?

11:04 AM Jul 31, 2024 IST | Web Editor
Advertisement

“இந்தியாவில் நல்ல அறிவியலும், திறமையும் உள்ள நிலையில் அதை நடைமுறைக்கு மாற்றி, நிலச்சரிவுகளை முன்னறிவிக்கும் எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்க வேண்டும்” என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு, தற்போதுவரை கிட்டதட்ட 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இத்துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் கேரளாவில் இது முதல் சம்பவம் இல்லை. இதுபோன்று பல முறை நிலச்சரிவுகள், இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் நிலச்சரிவு எச்சரிக்கை தொழில்நுட்ப மேம்பாட்டின் அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலர் மாதவன் ராஜீவன் கூறுகையதாவது:

“வானிலை ஆய்வு மையங்களால் கனமழைப் பொழிவு நிகழ்வுகளைக் கணிக்க முடியும். ஆனால், அது நிலச்சரிவை ஏற்படுத்துமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. கனமழை ஒவ்வொரு முறையும் நிலச்சரிவுக்கு வழிவகுக்காது. நிலச்சரிவை முன்னறிவதற்கு ஒரு தனி வழிமுறை தேவை.

இது கடினமானது என்றாலும் நடைமுறைக்குச் சாத்தியமானதே. மண் அமைப்பு, மண்ணின் ஈரப்பதம் மற்றும் சாய்வு உள்ளிட்டவை நிலச்சரிவுகளுக்கு வழிவகுக்கும் காரணிகளாக அறியப்படுகின்றன. இத்தகவல்களை ஒரு செயல்பாட்டு தொழில்நுட்ப அமைப்பில் உள்ளீடுவது முக்கியம். துரதிருஷ்டவசமாக, நம்மால் அதை இன்னும் செய்ய முடியவில்லை.

நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, கரையோர மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவோம். அதிக மழை பெய்தால் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களையும் நாம் இடமாற்ற வேண்டும். நம்மிடம் நல்ல அறிவியலும் திறமையும் உள்ளது. அதை நாம் நடைமுறைக்கு மாற்ற வேண்டியுள்ளது’ என்றார்.

இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வுக் கழகத்தின் பருவநிலை விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல் கூறியதாவது:

‘கேரளத்தின் பெரும்பாலான பிராந்தியம் மலை மற்றும் 20 டிகிரிக்கு மேல் சாய்வு உள்ள மலைப் பகுதிகளால் ஆனது. இதனால் கனமழையின் போது இந்த இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

கேரளத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயமுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இப்பகுதிகளில் மழைப்பொழிவுத் தரவுகளைக் கண்காணித்து, நிலச்சரிவுகளை முன்னறிவிக்கும் எச்சரிக்கை அமைப்புகளைத் தயாரிக்க வேண்டும். தற்போதைய கால அறிவாற்றலால் சாத்தியமாகும் இத்தொழில்நுட்பத்தால் பல உயிர்களையும், வாழ்வாதாரங்களையும் காப்பாற்ற முடியும்.

நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் நிலப் பயன்பாட்டு மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது’ என்றார்.

கேரள அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பேரிடர் மேலாண்மை நிபுணர் ஸ்ரீகுமார் கூறியதாவது:

தொடர்ந்து இரண்டு முதல் மூன்று நாள்களுக்கு 12 செ.மீ.க்கு மேல் மழை பெய்வது, கேரளத்தின் இலகுவான நிலப்பரப்பில் நிலச்சரிவு ஏற்பட போதுமானது. வயநாட்டில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகள் அதிகம் உள்ளன. மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றுவது மட்டுமே எங்களால் செய்ய முடியும். கடந்த 30 ஆண்டுகளில் இந்தப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மழைக்கால வீடுகளை அதிகாரிகள் கட்டித் தர வேண்டும்’ என்றார்.

Tags :
ExpertsKeralalandslideWarning SystemsWayanad
Advertisement
Next Article