வார்னர், மேக்ஸ்வெல் அதிரடி சதம் - நெதர்லாந்துக்கு 400 ரன்கள் இலக்கு..!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணிக்கு 400 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.
உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி வருகின்றன.
அந்த வகையில் நடப்பு தொடரின் 24-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் நெதர்லாந்து அணி மோதி வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரரான மிட்செல் மார்ஷ் 9 ரன்களுக்கு வெளியேறினாலும், டேவிட் வார்னர் - ஸ்டீவன் ஸ்மித் ஜோடி நெதர்லாந்து பந்துவீச்சாளர்களை கதிகலங்கச் செய்தது. ஸ்டீவன் ஸ்மித் 71 ரன்கள் விளாசி வெளியேற, அடுத்து களமிறங்கிய லபுச்சானே, வார்னருடன் கைகோர்த்து அணியின் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார்.
62 ரன்கள் விளாசிய நிலையில், பாஸ் டி லீட் பந்தில் ஆர்யன் தத்திடம் கேட்ச் கொடுத்து லபுச்சானே வெளியேறினார். மற்றொரு புறம் சதம் அடித்த டேவிட் வார்னர், லோகன் வான் பீக் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல் வெறியாட்டம் ஆடத் தொடங்கினார். வெறும் 40 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
இதன்மூலம் உலகக்கோப்பை தொடர்களில் குறைந்த பந்துகளில் அதிவேக சதம் விளாசிய வீரர் எனும் சாதனையை படைத்தார் மேக்ஸ்வெல். நடப்பு உலகக் கோப்பையில் இலங்கையுடன், தென்னாப்பிரிக்கா அணியின் எய்டன் மார்க்கிரம் 49 பந்துகளில் சதம் விளாசி இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், அதனை மேக்ஸ்வெல் முறியடித்தார்.
இதையும் படியுங்கள் : இறுதிக்கட்டத்தில் 'தனுஷ் 50' படப்பிடிப்பு - விரைவில் பேக்-அப்..!
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலிய அணி. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்குகிறது.