டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெற்றார் வார்னர் - அன்பு பரிசளித்த பாக். வீரர்கள்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெற்ற வார்னருக்கு, பாகிஸ்தான் வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை அன்பு பரிசாக வழங்கினர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில், முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 3 ஆம் தேதி தொடங்கியது.
இதில், பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 313 ரன்கள் எடுத்தது. பின்னர், விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 299 ரன்கள் எடுத்தது. பின்னர் பாகிஸ்தான் 14 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், ஜோஷ் ஹசல்வுட் வேகத்தில் பாகிஸ்தான் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலமாக ஆஸ்திரேலியாவிற்கு 130 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதுவரையில் 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வார்னர் 8,786 ரன்கள் குவித்துள்ளார். இதில், 26 சதங்கள், 37 அரைசதங்கள் அடங்கும். மேலும், 3 இரட்டை சதங்களும் அடித்துள்ளார். இந்த நிலையில், தான் இந்த போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வார்னருக்கு பாகிஸ்தான் வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளனர். ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வார்னருக்கு சிறப்பு மரியாதை செய்துள்ளனர். மேலும், தனது மனைவியை கட்டியணைத்து வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார்.