கிரிக்கெட் போட்டியை காண வந்தவர்களிடம் அதிக பார்கிங் கட்டணம் வசூல் - நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையர் உறுதி!
உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தை பெரிய திரையில் பார்க்க வந்த போது, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அதிக பார்கிங் கட்டணம் வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தணிக்கை நாள் 2023 -ஐ முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கணக்காயர்
அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சி
ஆணையர் ராதாகிருஷ்ணன், போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்
வழங்கினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது,
தணிக்கை நாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி
நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியதில் நான்
மகிழ்ச்சியடைகிறேன்.
உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தின் போது, பெசன்ட் நகர் கடற்கரையில் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்ட கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தது குறித்து முறையாக விசாரணை நடத்த குழு அமைத்திருக்கிறோம். மேலும், விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படியுங்கள்:மீண்டும் திறக்கப்பட்டது கோவை குற்றாலம் அருவி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வட சென்னை, மத்திய சென்னையின் பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. ஆனால், அதுவும் சற்று நேரத்தில் வடிந்துவிட்டது. சுரங்க நடைபாதை எல்லாம் தூய்மையாகவே இருக்கிறது.
மழை நீர் தேங்குவதை சரி செய்ய ஏற்கனவே இருக்கும் 500 பம்செட்டுகளோடு, கூடுதலாக 150 பம்செட்கள் வைத்திருக்கிறோம். சென்னை மாநகராட்சி முழுவதும் 23,000 ஊழியர்கள் தொடர்ந்து பணி செய்து வருகிறார்கள். மெட்ரோ பணி செய்யும் இடங்கள் பொதுவாக அசௌகரியமான சூழல் நிலவும். ஆனால், அதனையும் சரிசெய்துள்ளோம்.
மூன்று மண்டல ஆணையர் மூலம் தொடர் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தண்ணீர்
தேங்குவது, சாக்கடைகள் கலப்பது, மெட்ரோ குடிநீர் பிரச்னையாகாமல் இருப்பது என
அனைத்திலும் தொடர் கண்காணிப்பில் இருக்கிறோம். கனமழையின் போது, குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துவிட்டால், பொதுமக்கள் தங்குவதற்கு 169 தற்காலிக தங்கும் இடம் தயார் நிலையில் வைத்திருக்கிறோம்.
மேலும், பொது மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்,
ஆங்காங்கே காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவதால் , மழையில் நனையாமல் இருக்க
வேண்டும். மழையின் போது வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்பட்டு, சறுக்கு காயங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதால், கவனத்துடன் இருங்கள். பொதுசுகாதாரமும் தயார் நிலையில் வைத்திருக்கிறோம் என்றார்.