போர் பதற்றம் - முப்படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது.
இதனிடையே, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் வீரியமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் எல்லை பகுதிகளில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கைகளை இரு நாடுகளும் முன்னெடுத்து வருகிறது. இதனிடையே பாதுகாப்பு காரணமாக ஜம்மு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரில் முழு உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பாதுகாப்புத் துறைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தலைமை தலைவர் அட்மிரல் தினேஷ் திரிபாதி, விமானப் படைத் தலைவர் ஏர் சீப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே.சிங் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் நேற்று இரவு நடத்த தாக்குதல், இந்தியாவின் பதிலடி குறித்து விளக்கம் அளித்துள்ளனர். தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை மேற்கொண்ட பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.