போர் பதற்றம் - சென்னை விமான நிலையத்தில் 12 விமானங்கள் ரத்து!
காஷ்மீரின் பஹல்காமில் நடத்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் 9 முகாம்களை தகர்ந்தெறிந்ததாக கூறியது. இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வான் மண்டலங்களில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி இந்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் இந்த வான்மண்டல கட்டுப்பாடு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து எத்தியோப்பியா, காசியாபாத் ஹிண்டன், மதுரை, சண்டிகர், திருச்சி ஆகிய 5 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதைப்போல் சென்னைக்கு வரும் 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் போர் பாதிப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் ரத்து, பயண நேரம், தாமதம் ஆகியவை குறித்து அந்தந்த விமான நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரத்திற்கும் முன்பாகவும், சர்வதேச முனைய பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்பாகவும் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.