வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!
இஸ்லாமிய மதத்தில் இறை பணிகளுக்காக அளிக்கப்படும் அசையும், அசையா சொத்துகள் மற்றும் நன்கொடைகளை வக்ஃபு என்பார்கள். இந்த வக்ஃபு சொத்துக்கள் நிர்வாகம் செய்வதற்கு 1954 ஆம் ஆண்டு வக்ஃபு வாரிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை ஒழுங்குபடுத்த 1995, 2013 ம் ஆண்டுகளில் வஃக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
தொடர்ந்து ஒழுங்குபடுத்தப்பட்ட வக்ஃபு வாரிய சட்டத்தில் மேலும் சில திருத்தங்களை கொண்டுவர மக்களவையில் இதற்கான மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த மசோதாவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக் குழுவில் பாஜக கூட்டணியை சேர்ந்த 16 எம்பிக்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 10 எம்பிக்கள் இடம்பெற்றிருந்தனர். கூட்டுக்குழு சார்பில் பலமுறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று, ஒவ்வொரு பரிந்துரை தொடர்பாகவும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரைத்த மாற்றங்கள் ஏற்கப்பட்டன.
தொடர்ந்து கூட்டுக் குழுவினர் கடந்த ஜனவரியில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், வக்ஃபு வாரிய சட்டத்தில் 44 திருத்தங்கள் செய்யப்பட்ட 655 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை கடந்த பிப்வரியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில் வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மசோதா தொடர்பாக அவையில் 8 மணி நேரம் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 4 தேதியுடன் பஜ்ஜெட் தொடர் நிறைவடைய உள்ள நிலையில், இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
நாடாளுமன்றத்தில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதால், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் கட்சியில் உள்ள எம்.பி.-கள் தவறாமல் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. வக்ஃபு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.