வக்பு மசோதா: நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்போம் - நவாஸ் கனி எம்பி பேட்டி!
வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டால் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்போம் என ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்களது நிலங்கள் மற்றும் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த சொத்துகள் ஆகியவற்றுக்கு இறைவனுக்கு தானமாக வழங்கினர். இத்தகைய சொத்துகள் ‘வக்ஃப் சொத்துகள்’ என குறிப்பிடப்பட்டு அவை பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.
இந்த சொத்துகளை பராமரிக்க 1954-ம் ஆண்டு வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்ஃப் வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்ஃப் சொத்துகளை நிர்வகித்து வருகின்றன. இதன்கீழ் மாவட்ட வக்ஃப் குழுக்கள் செயல்படுகின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா தாக்க செய்யப்பட்டால் கடுமையாக எதிர்ப்போம் என ராமாநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் லீக் கட்சி எம்பியுமான நவாஸ் கனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது..
”மத்திய அரசுக்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவு கூற விரும்புகிறோம். வக்பு வாரிய மசோதா நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில் , முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்த்து வருகின்றனர். வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில் அதற்கான வரைவு அறிக்கை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிக சொத்துக்கள் உடைய பட்டியலில் மூன்றாவது இடத்தில் வக்பு வாரியம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை முறையாக மீட்டெடுக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டம் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கும் வகையில் சட்டபூர்வமாக வழி வகை செய்யும். பலநூறு ஆண்டுகள் பழமையான உரிய ஆவணங்கள் அல்லாத வக்பு இடங்களை கைப்பற்றவே இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எதிர்ப்பதோடு, இந்தியா கூட்டணி ஆதரவையும் கோருவோம். சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக உரிய முறையில் மத்திய அரசு ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். வரக் கூடிய 3 மாநில தேர்தல் நேரத்தில் அரசியலுக்காக இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.
இவ்வாறு நவாஸ் கனி எம்பி தெரிவித்தார்.