வக்ஃப் திருத்தச் சட்டம் - மே 20ல் முழுநாள் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் முடிவு!
இஸ்லாமியர்களுக்கு தானமாக வழங்கப்படும் வக்ஃப் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிர்வகித்து வருகிறது. இதை சீரமைக்கும் நோக்கில் வக்ஃப் சட்டம் 1995-ல் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு, அண்மையில் புதிய வக்ஃப் சட்டம் 2025 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதே போல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புதிய வக்ஃப் சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து புதிய வக்ஃப் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதன் பின்னர், வக்ஃப் திருத்த சட்டம் மத உரிமைகளை பாதிக்காது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
இதையடுத்து புதிய வக்ஃப் சட்டம் மீதான நீதிமன்ற விசாரணை கடந்த 5ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா தலைமையில் நடந்தது. அப்போது உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வுக்கு விசாரணை மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
பி.ஆர்.கவாய் புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று(மே.15) பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது தலைமையிலான அமர்வு புதிய வக்ஃப் சட்டம் மீதான விசாரணை நடந்தது. அப்போது, வக்ஃப் சட்டம் தொடர்பாக வருகிற மே 20 ஆம் தேதி முழு நாள் விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிடப்பட்டது.