“வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை தாக்குகிறது,” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
திருத்தப்பட்ட வக்ஃப் மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் பல மணி நேர விவாதங்களுக்கு உள்ளாகி அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதில் மசோதாவை எதிர்த்து மக்களவையில் எதிர்கட்சியினரின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மசோதா நிறைவேறியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனிடையே காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத், இந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள்ளார்.
இந்த நிலையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை தாக்கும் வகையில் இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “வக்ஃப் மசோதா இப்போது இஸ்லாமியர்களை தாக்குகிறது. எதிர்காலத்தில் இது மற்ற சமூகங்களை டார்கெட் செய்வதற்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறியிருந்தேன்.
ஆர்எஸ்எஸ் தனது கவனத்தை கிறிஸ்தவர்கள் மீது திருப்ப அதிக நேரம் எடுக்கவில்லை. இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து நம் மக்களைப் பாதுகாக்கும் ஒரே கேடயம் அரசியலமைப்பு மட்டுமே, அதைப் பாதுகாப்பது நமது கூட்டுக் கடமை” என்று ஆங்கில பத்திரிக்கையில் வெளியான செய்தியை குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் யாருக்கு அதிக நிலம் உள்ளது? என்ற கேள்வியுடனும் கத்தோலிக்க திருச்சபை vs வக்ஃப் வாரியம் என்ற தலைப்புடனும் செய்தி இடம்பெற்றுள்ளது.