தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட நாடு முழுவது நடைபெற்ற 102 நாடாளுமன்ற தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று (ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெற்றது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மாலை 5 மணி வரை 63.20% வாக்கு பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 67.52% பதிவாகியதாக தகவல்கள் வெளியாகின
இதனை அடுத்து மாலை 6 மணி அளவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.
பொதுவாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் காலை முதலே ஆர்வமாக நீண்ட வரிசையில் நின்று வாக்குப்பதிவில் இடுபட்டனர். இந்நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணி அளவில் வரிசையில் நின்றவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.