மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா! மத்திய அமைச்சர்கள் தீவிரமாக பங்கேற்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விக்சித் பாரத் யாத்திராவில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
2024 ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக ஆளும் பா.ஜ.க-வும், எதிர்க்கட்சிகளும் தீவிரமான பிரசாரத்தை முன்னெடுத்துவருகின்றன. பல்வேறு பிரசார யுக்திகளை நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க தொடங்கியிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் `விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா.’
மத்திய அரசு இதுவரை நடைமுறைப்படுத்திய கிசான் கிரெடிட் கார்டு, கிராமப்புற வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா திட்டம், PM ஸ்வாநிதி யோஜனா போன்ற அரசு நலத்திட்டங்களையும், அதன் மூலம் பயன்பெற்றவர்களுக்கு நினைவுகூரும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட `விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ என்ற விளம்பர பிரசாரம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதாவது மேற்குறிப்பிட்டது போன்ற திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட பேனர், டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்ட வாகனங்கள் நாடு முழுவதும் வலம்வந்து, மத்திய அரசின் திட்டங்களை விளக்கும்.
விக்சித் பாரத் யாத்ராவுக்காக டிஜிட்டல் பேனர்கள் வைத்து 2,500-க்கும் மேற்பட்ட வேன்களும் , ஸ்க்ரீன்களும் வைத்து 200-க்கும் மேற்பட்ட நடமாடும் தியேட்டர் வேன்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வேன்கள் 2.55 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளிலும், நகர்ப்புறங்களில் இருக்கும் 18,000 இடங்களிலும் அரசுத் திட்டங்களை விளம்பரப்படுத்தப் பயன்படும். இந்தப் பிரசார திட்டம் இரண்டு துறை அமைச்சகங்கள் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது. அதன்படி, விவசாய வேளாண்துறை அமைச்சகம் கிராமப்புற பிரசாரத்துக்கான முக்கிய அமைச்சகமாகவும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நகர்ப்புற பிரசாரத்தையும் முன்னெடுத்துச் செல்லும். இதைக் கண்காணித்துச் செயல்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகளையும் நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இந்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா பிரசாரத் திட்டத்தை, கடந்த 15-ம் தேதி ஜார்க்கண்டின் குந்தியில் பிரதமர் மோடி 5 IEC வேன்களைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். அதே நாளில், இதே போன்ற வேன்கள், நாடு முழுவதுமுள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் மாவட்டங்களில் இயக்கப்பட்டன. மேலும், இந்தப் பிரசாரம் ஜனவரி 25, 2024 அன்று முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டது.
எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்:
ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு விக்சித் பாரத் யாத்ரா பிரசார வாகனத் திட்டம் தொடங்கப்பட்டதால், இது தேர்தல் நடத்தை விதிமீறல் எனத் தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தை, சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் வரும் டிசம்பர் 5-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
பிரதமர் மோடியின் வேண்டுகோள்:
தேர்தல் நடைபெறாத மற்ற மாநிலங்களில் நடைபெறும் விக்சித் பாரத் யாத்ரா பிரசாரத் திட்டம் குறித்து நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது `விக்சித் பாரத்’ பிரசாரம், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் ஒரு பகுதியாகும். எனவே, விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் மத்திய அரசின் திட்டங்களை முன்னிலைப்படுத்தும் பிரசாரத்தில், மத்திய அமைச்சர்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.