Apple, Google, Microsoft அலுவலகங்களுக்கு சென்றது வியப்பூட்டும் அனுபவம் - முதலமைச்சர் #MKStalin
ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்குச் சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசுடன் கூகுள் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) பரிமாறிக்கொண்டது. இந்த கூட்டிணைவு AI ஸ்டார்ட்-அப் செயலாக்கம், திறன், மற்றும் MSMEகள் உட்பட தொழிற்சாலை சுற்றுச்சூழல் இயக்கம் போன்ற முக்கிய துறைகளில் முன்முயற்சிகளில் கவனம் செலுத்துகிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர் முன்னிலையில், கூகுள் கிளவுட் ப்ளாட்ஃபார்ம் தலைவர், அமித் ஜவேரி GM/VP மற்றும் கூகுள் பிக்சல் வணிகப் பிரிவு துணைத் தலைவர் நந்தா ராமச்சந்திரன், மற்றும் கைடன்ஸ் (Guidance) தமிழ்நாடு ஆகியோர் இடையே கூகுளின் மவுண்டன் வியூ அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில்..
'சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மேட் இன் இந்தியா பிக்சல் 8 ஃபோன் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுவது உட்பட மேம்பட்ட உற்பத்தியில் கூகுளுடன் கூட்டிணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு AI ஆய்வகங்களின் கீழ் உள்ள முக்கிய செயற்கை நுண்ணறிவு (AI) முயற்சிகளை ஆராயும். கூகுள் உடனான எங்களின் கூட்டாண்மை, தமிழ்நாட்டை ஒரு ஆக்கப்பூர்வமான AI மற்றும் மேம்பட்ட எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக நிறுவுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க செயல்பாடு ஆகும்.
நாம் தொழில்நுட்பத்தை மட்டும் பின்பற்றவில்லை; எதிர்காலத்தில் நமது மாநிலத்தை முன்னெடுத்துச் செல்ல அதன் சக்தியைப் பயன்படுத்துகிறோம். தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியான 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம், தமிழக இளைஞர்களை எதிர்காலத்தில் தயார்படுத்தும் AI திறன்கள் கொண்டிருப்பதையும், ஸ்டார்ட்அப்கள், இயக்கம், சுகாதாரம் மற்றும் பிற நடைமுறை சவால்கள் போன்ற முக்கிய துறைகளில் புதுமைகளை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். 2 மில்லியன் இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதற்காக அதிநவீன AI திறன்களைக் கொண்டு அவர்களைத் தயார்ப்படுத்துவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கூகுள் உடனான முயற்சிகளைக் காண நாங்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்." என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கூகுள் கிளவுட்டின் ப்ளாட்ஃபார்ம் தலைவர் அமித் ஜவேரி GM/VP கூறுகையில்,
"AI-ஆல் இயங்கும் எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். AI மூலம் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில் எங்களது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த கூட்டிணைவு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. புதுமைகளை செயலாக்குதல் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குதல் ல் மட்டுமல்லாமல், டிஜிட்டல் யுகத்தில் வெற்றிபெறத் தேவையான திறன்களைக் கொண்ட தனிநபர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு ஆக்கப்பூர்வமான AI சூழலைத் தமிழ்நாட்டில் உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட நாங்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்." என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
“ ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்குச் சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது. பல்வேறு வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் பற்றிப் கலந்துரையாடினோம். இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்த உறுதிபூண்டுள்ளோம்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.