"பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம்" - திருமாவளவன் எம்பி அறிவிப்பு!
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திருமாவளவன் எம்பி அறிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு எதிர்க் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
விஷச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளியான சின்னத்துரையின் சொந்த கிராமமான சேஷசமுத்திரத்திலும் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சேஷசமுத்திரத்தில் சின்னத்துரையிடம் கள்ளச்சாராயம் வாங்கி பருகியவர்கள் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை தொடர்ந்து சேஷசமுத்திரத்திலும் விஷச்சாராய விற்பனை நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. விஷச்சாராய வழக்கில் குற்றவாளி கன்னுக்குட்டிக்கு சாராயம் கொடுத்த சின்னத்துரையின் சொந்த கிராமத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மாலை உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இந்த நிலையில் கள்ளக்குறிச்சிக்கு விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் சென்றார். இதனைத் தொடர்ந்து விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை வீடு வீடாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
“ தொடரும் நச்சு சாராயச் சாவுகள்: கள்ளக்குறிச்சியில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலி! தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும்; தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தி சென்னையில் 24-06-2024 அன்று மாலை 3.00 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ” என திருமாவளவன் எம்பி பதிவிட்டுள்ளார்.