விஷச்சாராய உயிரிழப்பு: மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து, ஆல்கஹால், எத்தனால் உள்ளிட்ட மூலப் பொருட்களை விற்பனை செய்ய மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் நேற்று முன்தினம் (ஜூன் 19) உயிரிழந்தனர். நேற்று (ஜூன் 20) மேலும் 19 பேர் இறந்தனர்.
இதனிடையே, சேலம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டகளில் 15 பேர் இன்று (ஜூன் 21) உயிரிழந்தனர். இதன்மூலம், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49-ஆக உயர்ந்தது. மேலும், 114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் மரணங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 37,000 மருந்துக்கடைகளிலும் ஸ்பிரிட், சானிடைசர், ஹாண்ட் வாஷ் உள்ளிட்டவை மற்றும் ஆல்கஹால், எத்தனால் உள்ளிட்ட மூலப் பொருளாக இருக்கும் மருந்து பொருட்கள், சுத்தம் செய்யும் கிருமிநாசினிகளை விதிமுறைகளின்படி விற்பனை செய்ய தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அளவுக்கு அதிகமாக சானிடைசர் வாங்குபவர்களின் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் மருந்து கடைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.