#Visa | அமெரிக்கா செல்ல விரும்புவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!
இந்தியாவைச் சேர்ந்த விசா விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை கடந்தாண்டை விட 35 சதவீதம் அதிகம் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
"தொடா்ந்து 2-வது ஆண்டாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்களை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஏற்கெனவே பெற்றுள்ளது. மாணவர்களுக்கு விசா வழங்கப்படும் கோடை பருவத்தில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் நேர்காணல்களை நடத்தினோம். முதன்முறையாக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் இந்தியா முழுவதும் உள்ள ஐந்து அமெரிக்க தூதரகம், துணைத் தூதரகங்களில் நேர்காணல் நடத்தப்பட்டது.
இனி குடும்பம், வணிகம், சுற்றுலாவுக்காக அமெரிக்கா செல்லும் பயணிகளுக்கு விசா வழங்குவதில் கவனம் செலுத்த இருக்கிறோம். இந்தாண்டு இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 35 சதவீதம் கூடுதலாகும். ஏற்கெனவே, 60 லட்ச இந்தியர்கள் அமெரிக்க விசாவைக் கொண்டுள்ளனர். 2.50 லட்சம் பேருக்கு மூன்று மாதங்களுக்குள் விசா வழங்க உள்ளோம்.
இதையும் படியுங்கள் : GandhiJayanti | காந்தி திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!
ஒவ்வொரு நாளும் மேலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு விசாவை வழங்கி வருகிறோம். விசா செயல்முறையை மேம்படுத்துவதற்கும் விரைவுபடுத்துவதற்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்ததாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். டெல்லியிலுள்ள அமெரிக்க தலைமை தூதரகம் மற்றும் சென்னை, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில் உள்ள துணைத் தூதரகங்களில் பணியாற்றி வரும் எங்கள் தூதரகப் பணியாளர்கள் அயராது உழைத்து, அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்கின்றனர்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.