விருதுநகர் | இறந்ததாகக்கூறி போலி சான்றிதழ் வாங்கிய கவுன்சிலரின் கணவர்!
விருதுநகரில் உயிரோடு இருக்கும் போதே இறந்ததாக கூறி போலி சான்றிதழ் பெற்று இடத்தை வாங்கிய ஒன்றிய கவுன்சிலரின் கணவர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா நாசர் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் இருளாயி. இவருக்கு சொந்தமாக 86 சென்ட் நிலம் சூரங்குளத்தில் உள்ளது. இருளாயி உயிரோடு இருக்கும் போதே அவர் இறந்து விட்டதாக கூறி போலி சான்றிதழை ஜெயராஜ் என்பவர், இருளாயின் சித்தப்பா தங்கம் உதவியுடன் வாங்கியுள்ளார்.
மேலும் இருளாயிக்கு சொந்தமான நிலத்தை அவருக்கு தெரியாமலேயே தங்கம் என்பவர் கடந்த 2024ம் ஆண்டு நரிக்குடி 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஜெயராணியின் கணவர் ஜெயராஜ் என்பவருக்கு விற்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து இருளாயி கடந்த 4 நாள்களுக்கு முன்பு பட்டா மாறுதலுக்காக விஏஓ-வை சந்தித்துள்ளார். அப்போது நீங்கள் இருந்துவிட்டதாக போலி சான்றிதழ் வாங்கி அந்த இடத்தை விற்றதாக கூறியுள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த இருளாயி குடும்பத்தினர், மேலும் இது சம்பந்தமாக தங்கவேலிடமும் மற்றும் ஜெயராஜ் இடமும் முறையிட்டுள்ளனர்.
அப்போது ஜெயராஜ் இருளாயி குடும்பத்தை மிரட்டியுள்ளார். ஆகையால் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டியும் மேலும் தங்களுடைய நிலத்தை மீட்டு தர வேண்டியும், சம்மந்தப்பட்ட இருளாயி குடும்பத்தினர்கள் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.