#ViratKohli | சச்சினுக்கு பிறகு விராட் கோலி மட்டுமே... சர்வதேச கிரிக்கெட்டில் மற்றொரு சாதனை!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் மற்றுமொரு மகத்தான சாதனையைப் படைத்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்துவரும் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் வங்கதேசத்திற்கு எதிராக பேட்டிங் செய்யும் போது, இந்தியாவில் 12,000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் விராட் கோலி. முன்னாள் இந்திய ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருக்குப் பின்னால் இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். சமீபத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற கோலி 219-வது போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டெல்லியில் பிறந்த விராட் கோலி இதுவரை இந்திய மண்ணில் மட்டும் 38 சதங்கள் மற்றும் 59 அரைசதங்கள் அடித்து 12,000 ரன்களைக் கடந்துள்ளார். அதே வேளையில் வியக்கத்தக்க வகையில் 58.84 சராசரியையும் வைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 258 ஆட்டங்களில் விளையாடி 14,192 ரன்களை குவித்துள்ளார். மும்பையைப் பிறப்பிடமாகக் கொண்ட சச்சின் உள்நாட்டில் மட்டும் 42 சதங்கள் மற்றும் 70 அரைசதங்கள் அடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியைத் தொடர்ந்து மற்ற இந்திய வீரர்கள் ஒருவர்கூட 10 ஆயிரம் ரன்களைக் கடக்கவில்லை. அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டி20 உலகக் கோப்பையை வென்று தந்த முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் 21 சதம், 51 அரைசதம் உள்பட 9004 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். நான்காவது இடத்தில் இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்ற தந்த கேப்டன் ரோஹித் சர்மா 27 சதம் மற்றும் 35 அரைசதங்கள் உள்பட 8,690 ரன்கள் குவித்துள்ளார்.
இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான வீரேந்திர சேவாக் 18 சதங்கள் மற்றும் 33 அரைசதங்கள் உள்பட 7,691 ரன்கள் குவித்து 5-வது இடத்தில் உள்ளார்.