பட்டமளிப்பு விழாவில் RCB ஜெர்சியை அசைத்து காட்டிய விராட் கோலி ரசிகை - அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்யம்!
அமெரிக்காவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆர்சிபி ரசிகை ஒருவர், அந்த அணியின் ஜெர்சியை அசைத்து காட்டியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு உலகம் முழுவதுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வெவ்வேறு அணிகளுக்காக விளையாடுவதால், பிற நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஐபிஎல் தொடரை கண்டு ரசிக்கின்றனர். இந்தியாவிற்கு வந்தும் நேரில் போட்டிகளை கண்டு மகிழ்கின்றனர்.
விளையாட்டு என்பதை தாண்டி, களத்தில் வீரர்களுக்கு இடையே நடக்கும் வாக்குவாதங்கள், இரு அணி ரசிகர்களுக்கு இடையே சமூக ஊடகங்களில் நடக்கும் அலப்பறைகள் என பல சுவாரஸ்ய சம்பவங்கள், ஐபிஎல் தொடரை இன்னும் பல தரப்பு மக்களிடம் கொண்டு சேர்த்தன.
விளையாட்டு வீரர்களுக்கு இருக்கும் ரசிகர்கள், அவர்கள் எந்த அணியில் இடம்பெற்றிருக்கிறார்களோ, அந்த அணிக்கு ஆதரவு தெரிவிப்பது வழக்கமான ஒன்று. உதாரணமாக எம்.எஸ்.தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதை நேரிலும், சமூக ஊடகங்களிலும் காண முடியும்.
அதேபோல் விராட் கோலிக்கும், அவர் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் உலகளவில் ரசிகர்கள் ஏராளம். மூன்று முறை ஃபைனலுக்கு முன்னேறிய போதிலும், ஒரு முறை கூட கோப்பையை ஆர்சிபி வென்றதில்லை. விராட் கோலி, கிறிஸ் கெய்ல், ஏ.பி.டி.வில்லியர்ஸ் என சிறப்பான வீரர்களை கொண்டிருந்த ஆர்சிபி, சாம்பியன் பட்டம் வெல்ல முடியாதது புரியாத புதிராகவே இருக்கிறது. விராட் கோலி ஓய்வு பெறுவதற்கு முன் ஆர்சிபி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசையை சமூக ஊடகங்களின் காண முடிகிறது.
இதையும் படியுங்கள் : சட்டென சரிந்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ.800 குறைவு!
இவ்வாறு ஆர்சிபி அணிக்கான ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் பட்டம் பெறும் நிகழ்ச்சியில் ஆர்சிபி ரசிகை ஒருவர், அந்த அணியின் ஜெர்சியை அசைத்து காட்டியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற இந்தியாவைச் சேர்ந்த மாணவி லிகிதா சுக்கலா, பட்டமளிப்பு விழாவின் போது ஆர்சிபி அணியின் ஜெர்சியை அசைத்து காட்டியுள்ளார்.