வானத்திலிருந்து மேகம் விழுந்ததாக பரவும் வைரல் வீடியோ - உண்மை என்ன ?
This News Fact Checked by ‘Factly’
வானத்திலிருந்து வெள்ளை நிறத்தில் மேகம் விழுந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
இந்தோனேசியாவில் வானத்தில் இருந்து கொத்தாக மேகம் விழுவதைப் போல வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் , சீருடை அணிந்த சில நபர்கள் வானத்திலிருந்து தரையில் விழும் ஒரு வெள்ளை நிறத்திலான பொருளை எடுக்க அதனை நோக்கி ஓடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வைரலான வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஃபேக்ட்லி ஆய்வுக்கு உட்படுத்தியது.
உண்மை சரிபார்ப்பு :
வைரலான வீடியோவில் இடம்பெற்ற கூற்றின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, இந்த சம்பவம் குறித்து முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனவா என்பதை அறிய முற்பட்டோம். அதன்படி வீடியோ தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். தேடல் முடிவில் இந்த சம்பவம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி அறிக்கைக்கு நமக்கு கிடைத்தது.
இந்த அறிக்கையின்படி, இந்த சம்பவம் இந்தோனேசியாவில் உள்ள தொழிற்சாலை அதிகம் இருக்கும் பகுதியில் நடந்தது என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவில் காணப்படும் நுரை போன்ற பொருள் சுற்றியுள்ள தொழிற்சாலை மற்றும் சுரங்கப் பகுதிகளில் கழிவுகள் அல்லது மாசடைதல் காரணமாக உருவாகி இருக்கலாம் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைப் பற்றி மேலும் அறிய, இந்தோனேஷிய மொழியில் இணையத்தில் முக்கிய வார்த்தைகளைத் தேடினோம், இது இந்தச் சம்பவத்தைப் பற்றிய பல உள்ளூர் செய்தி அறிக்கைகளுக்கு எங்களை அழைத்துச் சென்றது.
இந்த தகவல்களின்படி, இந்தோனேசியாவின் கலிமந்தன் மாகாணத்தில் உள்ள மொரோங் ராயா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது, மேலும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. CNN இந்தோனேஷியா மற்றும் VOI ஆகிய தளங்களில் வானத்தில் இருந்து விழுந்தது போல காணப்படுவை வெள்ளை நிறை மேகம் அல்ல என்று தெரிவித்தன. இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) இதை உறுதி செய்துள்ளது . செய்தி அறிக்கையின்படி, BMKG இன் இயக்குனர், வீடியோவில் காணப்படும் வெள்ளை நிறமானது இயற்கையான மேகம் அல்ல எனவும் சுரங்கப் பகுதியில் ஏற்படும் நீராவி அல்லது வாயு போன்றது என தெரிவித்துள்ளார்.
"துகள்கள் மிகவும் இலகுவாகவும், குறைந்த அடர்த்தியுடன் சிதறியும் இருப்பதால், மேகங்கள் அடர்த்தியான கொத்துகளாக மேற்பரப்பில் விழ முடியாது . ஏனெனில் மேகங்கள் என்பது மிகச் சிறிய மற்றும் லேசான நீர்த்துளிகள் அல்லது பனிக்கட்டி படிகங்களின் தொகுப்பாகும். எனவே அவை காற்று நீரோட்டங்களின் உதவியுடன் வளிமண்டலத்தில் தொடர்ந்து மிதக்கின்றன என VOI தெரிவித்துள்ளது . ஒருவேளை மேகத் துகள்கள் பொதுவாக நிலத்தை அடைவதற்கு முன்பே ஆவியாகிவிடும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேபோல நேஷனல் ஜியோகிராஃபிக் படி , மேகங்கள் என்பது பூமியின் வளிமண்டலத்தில் நீர்த்துளிகளின் திரட்சியாகும், மேலும் அவை பூமியின் மேற்பரப்பில் இருந்து 2000-12000 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன. மேகங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் காணலாம். சுருக்கமாக, நீர், நீராவி அல்லது வாயுவின் ஒடுக்கம் காரணமாக ஏற்படும் ஒரு வெள்ளை நிறத்திலான திரட்சிதான் சமூக வலைதளங்களில் வீடியோவாக தவறாகப் பகிரப்பட்டது.
முடிவு :
சமூக வலைதளங்களில் வானத்திலிருந்து விழுந்த மேகம் என வைரலாகும் வீடியோவில் காணப்படும் வெள்ளைப் பொருள் உண்மையான மேகம் அல்ல. இதனை இந்தோனேசிய வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் ஏஜென்சி (BMKG) இயக்குனர் உறுதிப்படுத்தினார், இது மனித செயல்பாடு காரணமாக உருவாக்கப்பட்ட நீராவி அல்லது வாயுவின் ஒடுக்கம் ஆகும். எனவே வைரலான கூற்று தவறானது .
Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.