விக்கிரவாண்டி உட்பட 13தொகுதிகளின் இடைத் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உட்பட பிற மாநிலங்களைச் சேர்த்து மொத்தம் 13 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூலை 13-ம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து ஜூன் 14 முதல் 21-ம் தேதி வரை வேட்புமனு தாக்கலும், 24-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 26-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலை அதிமுக புறக்கணிப்பு செய்தது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் மட்டுமன்றி, பீகார் (1), இமாச்சல் பிரதேசம் (3), பஞ்சாப் (1), உத்தரகாண்ட் (2), மேற்கு வங்காளம் (4), மத்திய பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகள் என மொத்தம் 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.