விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி, உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6ஆம் தேதி காலமானாா். இதையடுத்து அத்தொகுதி காலியானதாக ஏப்ரல் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தோ்தல் விதிகளின்படி, ஒரு சட்டப்பேரவை அல்லது மக்களவைத் தொகுதி அதன் உறுப்பினரின் உயிரிழப்பாலோ, ராஜிநாமா அல்லது வேறு காரணங்களுக்காகவோ காலியானதாக அறிவிக்கப்பட்டால், அத்தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தப்படவேண்டும்.
அதன்படி, விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வரும் 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பம் என்றும் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு ஜூன் 21ஆம் தேதி கடைசிநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனுக்கள் மீது 24ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற 26ஆம் தேதி கடைசிநாள் ஆகும்.
இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் மொத்தம் 13 சட்டப்பேவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அடுத்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும்போது "விழுப்புரம் மாவட்டத்திற்கு எந்த ஒரு புதிய திட்டமும் அறிமுகப்படுத்தக் கூடாது. சட்டப்பேரவையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டம் அறிவிக்க கூடாது. இடைதேர்தலுக்காக துணை ராணுவம் பாதுக்காப்பிற்காக தமிழ்நாடு வருவார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தபட்ட EVM இயந்திரம் இடைதேர்தலுக்கு பயன்படுத்தபடாது" என்றார்.